Saturday, May 11, 2013

கருமந்துறை - வனவாசி சேவா கேந்திரம்


​சேலம் அருகே கல்வராயன் மலைப் பகுதியில் கருமந்துறையில் செயல்படுகிறது வனவாசி சேவா கேந்திரம். மலை வாழ் மக்களுக்கான முன்னேற்றப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகிறது இவ்வமைப்பு. தமிழ் நாடு முழுக்கவும் நீலகிரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், சேலம், கள்ளகுறிச்சி இப்படி மலைப்பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வமைப்பு செயல்படுகிறது. வருட இறுதியில் இவ்வெல்லாப் பகுதிகளிலிருந்தும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து 5 நாள் முகமை நடத்துகிறார்கள். இம்முறை ஏப்ரல் 30 முதல் மே 4 வரை.

எங்களுக்கு மே 1 விடுமுறை. YFS-இலிருந்து 7 பேர் இம்முகாமிற்குச் சென்று வரத் தயாரானோம். முதலில் டெம்போ டிராவெலர் வைத்துக் கொண்டு செல்லலாம் என்று யோசித்து பிறகு பேருந்திலேயே செல்வதென்று முடிவாயிற்று. பாலா, அமித், பிரியா, தாமோதரன், தினேஷ், பிரதீப் மற்றும் நான். அமித்துடன் பணிபுரியும் கணேஷ் என்பில்ட் எடுத்துக் கொண்டு தனியாகவே பயணம் செய்து சேலம் வந்திருந்தார். தினேஷ் பெருங்களத்தூரில் ஏறக் காத்திருந்தார். மற்ற எல்லோரும் குறித்த நேரத்திற்கு வந்துவிட்டோம். ஆனால், பேருந்து கிளம்பத் தாமதமாயிற்று. பேருந்தின் பொறுப்பாளர்கள், 5 நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வந்து அந்த 6 டிக்கெட் நீங்க தானே என்பதும், இன்னும் எத்தனை பேரு வரணும், எங்கே ஏறுகிறார் என்பதும் மாறாத கேள்விகளாயிற்று. எங்களில் ஒருவர் தன் இருக்கைவிட்டு, பேசும் வசதிக்காக தற்காலிகமாக காலியாக இருந்த மற்றொரு இருக்கைக்கு வர, பேருந்தின் நடத்துனர்கள் இந்தியா பாகிஸ்தான் இடம் மாறியது போல் பெரிதும் குழம்பிவிட்டார்கள். அவர்களுடைய அப்பாவித்தனமான பதட்டமும், குழப்பமும் ரசிக்கத் தக்கதாக இருந்தது. ஒருவழியாக இரவு மிகத் தாமதமாக கிளம்பிய பேருந்து காலை 6.30 மணிக்கு சேலம், அம்மாபேட்டை சென்றடைந்தது. அமித்தின் நண்பர் முன்பாகவே வந்து காத்திருந்தார். டீக்குப் பிறகு முகாம் நடக்கும் பள்ளியை அடைந்தோம். ஸ்ரீ வித்யா மந்திர். பொறுப்பாளர்களில் ஒருவரான திரு பிரகாஷ் எங்களை வரவேற்றார். சக பொறுப்பாளர்களிடம் எங்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த ஒரு மணியில் பள்ளியிலேயே குளித்துத் தயாரானோம். உண்டி தாயாராக இருந்தது. முகாம் பங்கேற்பாளர்களே பரிமாறினார்கள். உணவு முடித்து சற்று நேரம் பொறுப்பாளர்களுடன் ஓர் உரையாடல். மலை வாழ் மக்களுக்காக நடை பெற்று வரும் பணிகளை விளக்கினார்கள். மலைப்பகுதி வாழ் குழந்தைகளுக்கான கல்வி இவர்களின் முக்கியமான ஒரு பணி. அதோடு இம்மக்களில் ஒருவரே சுகாதாரத் தன்னார்வலராகப் பயிற்சி கொடுக்கபட்டிருக்கிறார். அவர் மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, முதலுதவியும் செய்கிறார். கவனம் தேவைப்படும் நோய்களை இனம் கண்டு முறையான மருத்துவத்திற்கு அறிவுறுத்துகிறார். இது தவிர, இயற்கை முறை விவசாயத்தில் இம்மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வுக்கும், பயிற்சிக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். இப்படிப் பல தளங்களில் ஊக்கத்தோடு செயல்படுகின்றனர் இவ்வமைப்பினர்.



முதலில் கருமந்துறை சென்று வந்து மாலையில் முகாம் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு. ஒரு தவெரா; இரண்டு பேர் என்பில்டில். நல்ல வெயில் தொடங்கி இருந்தது. பயணம் சேலம் - கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் ஒரு 30 கி.மீ கடந்து பின்பு கிளைச் சாலை கருமந்துறை நோக்கிப் பயணிக்கிறது. தரமான சாலைகளாகவே இருந்தது. அதிக ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பகுதி இல்லை. செழிப்பான மலைப்பகுதி தான். இவ்வருட வறுமையிலும் பசுமையோடு இருந்தது. நிறைய தென்னை மரங்கள் மற்றும் மாமரங்கள் எங்கள் கண்களில் பட்டவை; எங்களுக்குப் பரிச்சயமானவையும் அவையே;)



டவெராவில் நான் முன் வரிசையில் இருக்க பின்னால் நண்பர்கள் முடிகுறைந்து அழகூடியிருக்கும் என்தலை வெறுமையைப் படம் பிடித்து விளையாட்டுவம்பு பண்ணிக் கொண்டிருந்தார்கள். கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு தூங்கிய பிரதீப்பைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கருமந்துறையில் 10-ம் வகுப்பு வரை பள்ளி. தமிழகத்தில் வனவாசி சேவா கேந்திர அமைப்பு முதன் முதலாக தொடங்கிய பள்ளி. பழமையின் எழில் கொண்டு விளங்கியது. வரவேற்று இளநீரோடு உபசரித்தார்கள்.



இங்கிருந்து நவம்பட்டு சென்றோம். 5-ம் வகுப்பு வரை பள்ளி இங்கே.



அருகில் திரு.நாதன் அவர்களின் வீடு. கணவனும் மனைவியும் டெல்லியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். நாமக்கல் அருகே மோகனூரைச் சேர்ந்தவர்கள். ஓய்வு வாழ்க்கை இப்பகுதியில். அழகாகத் தன் விருப்பம் போல் தோட்டத்தோடு ஒரு வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ரசனை கொண்டோர் கனவில் உருவாக்கும் வீடுகளில் ஒன்று. உயர்ந்த ஓட்டுக் கூரைகள். இத்தனை வெயிலுக்கும் தளம் குளுமையாக இருந்தது. நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும். பள்ளியில் ஹிந்தியும், பேசு ஆங்கிலமும் பயிற்றுவிக்கிறார்கள். நாதன் ஒற்றை நாடி மனிதர்; உற்சாகமாகப் பேசக்கூடியவர். நூறு நாள் வேலைத் திட்டத்தினால் விவசாயத்திற்கு ஆட்கள் தட்டுப்பாடு என்றார்.



அறிமுகமாகிப் பேசிக் கொண்டிருக்கும் போது பிரியா பொறுமையாக தன் கைபேசியைத் தேடத் தொடங்கினார். கைப்பையில், வீட்டில் எங்கும் இல்லை. சிறு அமைதியின்மை சூழ்ந்தது. எல்லோரும் தேடத் தொடங்கினோம். வாகனம், அதன் பிறகு பள்ளி. கிடைக்கவில்லை. நாதன் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பினோம். செல்லும் வழியில் மீண்டும் ஒரு முறை பள்ளியில் பார்த்து செல்ல எண்ணியிருந்தோம். நானும் பிரதீப்பும் என்பீல்டில். பள்ளியை அடைந்து கதவருகே சென்றதும் முதலில் கண்ணில் பட்டது கைபேசியின் உரைதான். எடுத்தேன். கைபேசி பத்திரமாக உறைக்குள் இருந்தது. நான் கைபேசியை எடுக்கவும், தவெரா வரவும் சரியாக இருந்தது. நண்பர்கள் நான் சதி செய்து மறைத்துவைத்து விட்டதாக வம்பு பண்ணத் தொடங்கினார்கள். ப்ரியவுக்கே கூட சற்று சந்தேகம் .....!!

கைபேசி கிடைத்ததும் பழைய உற்சாகம் திரும்பியது. கருமந்துரைக்கு திரும்ப வேண்டும். பள்ளியில் உணவு தயாராகி இருந்தது. வீட்டுக் காய்கறிகள் கொண்டு சமையல். தனிச் சுவையுடன் இருந்தது. உணவு தயாரித்திருந்த அம்மாவின் அன்பு உபசரிப்பால் நிறையவே உண்டுவிட்டேன். இப்போது சேலம் திரும்ப வேண்டும்.

பிரதீப்பும் நானும் தற்காலிக என்பில்ட் உரிமையாளர்கள்! திரும்பும் வழியில் ஒரு அணையினை படம் பிடிக்கும் முயற்சியில் எந்திரத்தை அணைத்துவிட, திரும்ப உயிர் கொடுப்பதற்குள் திணறிவிட்டோம். புவிஈர்ப்பு விசையிலேயே மூன்று கிமீ போல பயணித்தோம். டி.வி.எஸ் ஒன்றை முந்திக்கொண்டு வேறு எங்கள் வாகனம் சென்றது. அதிக எடை கொண்டதை அதிவேகமாகக் தன்னை நோக்கிக் கவரும் பூமியின் ஆவல். விசை என்பதே ஆசை தானோ என்னவோ!



சேலம் திரும்பும் வழியில் வாழப்பாடியில் நுங்கு, தேநீர். வாழப்பாடி கடந்து சேலம் - கோயம்பத்தூர் நெடுஞ்சாலையில் பயணம். மரங்கள் மருந்துக்குக் கூட காண முடியாத கொடிய சாலை. நெருப்பை முகர்ந்தது போல் அனல் அடித்தது. அரேபியப் பாலைவனத்துச் சாலையும், இதுவும் ஒன்று விரைந்து செல்ல உதவும் தரத்திலும், பசுமை ஏதுமற்ற அமைப்பிலும். ஒரே பெரிய வித்தியாசம் அங்கே பாலை நிலம் இயற்கையாய் அமைந்தது. இது அக்கறையற்ற பேராசை கொண்ட மனிதன் உருவாக்கியது.

சேலம் பள்ளியை அடைந்த போது மாலை 5 மணி. தேநீர். பிறகு முகாம் பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து அவர்கள் விளையாட்டுக்களில் கலந்து கொண்டோம். வெகு நாளைக்குப் பிறகு உடற்பயிற்சிக்கான பாரில் பயிற்சி செய்ய முயற்சித்தேன். மூன்றுக்கு மேல் உள்ளிறங்கி மேல் வரக் கடினமாக இருந்தது. விளையாட்டுக்க்குப் பின் சிறு இடைவெளி. அமித்தின் நண்பர் கணேஷ் தண்டர் பெர்ட்-இல் சென்னை திரும்ப வேண்டும். நெடிய பயணம். மாலையே கிளம்பிவிட்டார். இடைவேளைக்குப் பிறகு பக்திப் பாடல்கள், சத் சங்கம். சத் சங்கத்தில் இன்று எங்களில் ஒருவரை நல்ல விஷயம் ஒன்று பகிருமாறு அழைத்தனர். ஒருமித்த குரலாக மகிழ்ச்சியுடன் பிரியாவும், பாலாவும், அமித்தும் என்னைச் சிக்க வைத்தனர். எது வேணுமானாலும் பேசுங்கள் என்று சொல்லிச் சென்றுவிட்டார் பொறுப்பாளர். என்னென்னவோ தலைக்குள் ஓடத் தொடங்கியது. முதலில் உதித்தது பிளாஸ்டிக் உபயோகம் மற்றும் கழிவு மேலாண்மை. ஏனோ அது வேண்டாம் என்று ஒதுக்கினேன். எப்படியோ மனம் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த தளங்களில் வந்து நின்றது. கடினமெனினும் அதையே பகிர்வதென முடிவு செய்தேன். மின்சாரம் இல்லை. முகம் பகுத்தறிய முடியாத வெளிச்சத்திலேயே பேசினேன்.

நம்முடைய நாகரிகமும் பண்பாடும் பல்லாயிர வருடப் பின்னணி கொண்டவை. இத்தனை பெரிய கால வெள்ள ஓட்டத்தில், அனுபவங்கள் மூலம் நம் முன்னோர்கள் உன்னதமான விஷயங்கள் பலவற்றை நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றின் கூடவே வேண்டாத சில பிணிகளும் வந்து சேர்வது தவிர்க்க முடியாதது. அவற்றைக் கண்டு உணர்ந்து களைந்து முன்னேறுவதே நாம் செய்ய வேண்டியது. மாறாக, நமக்கு வந்து சேர்ந்திருக்கும் ஒட்டு மொத்த பாரம்பரியத்தையும் பழமை, மூடத்தனம் என்று ஒதுக்குவது நம் மீதே நாம் மரியாதை இழப்பதற்குச் சமம். பகவத் கீதையே என்னை விவாதித்து ஏற்றுக் கொள் அல்லது நிராகரி என்றே சொல்கிறது. இத்தகைய நெகிழ்வுத் தன்மை நம் மரபிற்கே உரிய பெரும் சிறப்பு. நம் மரபின் மேல் உள்ள மரியாதையை இழப்பது நம் மீதான மரியாதையை நாமே இழப்பதாகும். கோவில்களும், நம் கலைகளும், வழிபாட்டு முறைகளும் நம் மரபின் சின்னங்கள். அவற்றைக் காப்பது நம் கடமை. இவ்வாறமைந்தது என் பேச்சு.







இரவுணவு பருப்புத் துவையலோடு ரசம் மற்றும் மோர் சாதம். அருமையான உணவு. என் சிறு வயது வாழ்க்கையை நினைவூட்டுவதாக அமைந்தது. சிறு வயதில், ஊரில் வளவில் திருமணம் (எங்கள் பெரிய வீட்டு வாரிசுகளின் திருமணம்) என்றால் மூன்று நாள் கல்யாண வீடு. முதல் நாள் மாலைப் பலகாரம் முதல் பந்தி. வளவாட்கள் (பங்காளிகள், மாமன் முறை சொந்தங்கள்) கூடுவர். முந்தய நாள் இரவு, திருமண நாளன்று மூன்று வேளை, மறுநாள் (மக்யா நா!) மாலைப் பலகாரத்தோடு விருந்து நிறைவுறும். மூன்று நாள் விருந்தில் திகட்டிப் போன வயிறுக்கு செரிமானம் எளிதாக வேண்டும் இப்போது. அதற்கு அம்மா தயாரிக்கும் உணவு ரசம் சோறும், பருப்புத் துகையலும் ....இங்கே சாப்பிட்ட உணவு இதை நினைவூட்டியது.

இரவுணவுக்குப் பின், மலைப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் பாரம்பரியக் கலைகளின் பகிர்வு. தங்கள் பகுதியில் வழக்கத்திலிருக்கும் நாட்டுப் பாடல்களுக்கு நடனமாடினர் முகாமில் கூடியிருந்தோர். 11 மணிக்கு பேருந்து. எங்களுக்கு நேரமாகிவிட நிகழ்ச்சிக்கிடையில் மிச்சத்தை இழக்க மனமின்றி விடை பெற்றோம். வாசல் வரை வந்து விடை கொடுத்தனர், அமைப்பாளர்கள். மூன்று சக்கர வாகனத்தில் பேருந்து நிலையம் செல்லும் அவசரத்தில், தாமுவும், தினேஷும் 'சேலம் செட்' நினைவுபடுத்தினர். என்னது அது என்றோம் ஒருமித்த குரலில். அமித்தும், நானும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா என்ன...பாதி வழியில் சேலம் செட் 'நடமாடும் கடையைக் கண்டு அவசர அவசரமாக வண்டியை நிறுத்தினோம். எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரவில்லை. அருமையாக இருந்தது சேலம் செட். இரண்டு தட்டைகளுக்கு நடுவில் மசாலாவுடன் காரட், வெங்காயத் துருவல். இதுதான் அந்தப் பதார்த்தம். சேலம் வந்து மாம்பழம் வாங்காமல் எப்படி. சந்தையில் நின்றது நல்லதாக ஆயிற்று. அமித் வாங்கி வந்துவிட்டார்.

பேருந்து கிட்டத்தட்ட குறித்த நேரத்திற்கு கிளம்பியது. நல்ல களைப்பு. கிளம்பியதுமே உறங்கிவிட்டேன் போல. அரை மணி கழிந்திருக்கும். பேச்சரவம் கேட்டு விழித்தேன். ஏதோ பிரச்சினை போல் தெரிந்தது. பேருந்தின் கண்ணாடி ஒன்று கல்லெறிந்து சேதமாகியிருந்தது. தன் தலைவனை சிறையில் அடைத்ததற்காக டாஸ்மாக்கில் வேரிமயிர் பொங்க கிளப்பப்பட்ட சிங்கங்கள்! தலைவர், பொது மக்களின் நலன் ஒன்றிற்காக மட்டுமே அவதாரம் எடுத்தவராயிற்றே. பொது மக்களை அவதிக்குள்ளாக்கி, பொது உடமைகளைச் சிதைப்பது தானே நியாயம்! பலவாறு கீறல் விழுந்த கண்ணாடிக்கு அருகே இருந்த இருக்கையில் அம்மாவும் குழந்தையும் அமர்ந்திருந்ததாக நினைவு. கண்ணாடி சிதறவில்லை. ஆபத்து ஒன்றுமில்லை. கீறல் விழுந்த கண்ணாடியை ஓட்டுனரே முழுதும் உடைத்தெடுக்க பயணம் தடைப்படாமல் தொடர்ந்தது.
பிரதீப் 8 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும். பேருந்து 6 மணிக்கெலாம் சென்னைக்குள் வந்துவிட்டது. தாமதம் ஏதும் இல்லாமல் எல்லோரும் வீடு சேர்ந்தோம். பங்கு கொண்ட எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு சிறு அசைவையேனும் ஏற்படுத்திய பயணம். ஒரு நாளின் நேரத்தை அகண்ட கடலென விரித்தெடுத்த பயணம். விரித்தெடுக்கபட்ட நாளின் ஒரு கணம் கூட அலுப்புத் தட்டாத பயணம்! ஒவ்வொரு பயண முடிவிலும் அடுத்த பயணத்திற்கான ஏக்கத்தோடே மனம் விடை பெறுகிறது.