Sunday, June 16, 2013

School Kit Packing - 2013 Moments..


யூத் ஃபார் சேவாவின் பரபரப்பு நிறைந்த ஞாயிறுகளில் ஒன்று ஜூன் 9, 2013. 30000 எழுது புத்தகங்கள் (Note books), 2000 புத்தகப் பைகள் (School Bags) மற்றும் கல்வி உபகரணங்கள் (பேணா, அளவு கோல், பென்சில், எரேசர்) அனைத்தும் இரண்டு மூன்று தவணைகளில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருந்தது YFS அலுவலகத்தில். ஒவ்வொரு குழந்தைக்கான உபகரணங்களை ஒன்றாகச் சேர்க்க வேண்டும். அதுதான் இன்றைய வேலை. காலை 10 மணிக்குத் தொடங்குவதாகத் திட்டம். 10.30 மணிக்கெல்லாம் 30 பேர் கூடியிருந்தோம்.  மூன்று குழந்தைகள் எங்களை முன்னெடுத்துச் செல்ல. உற்சாகத்திற்குக் குறைவேது! 



விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சில பணிகள் சிலரை மட்டுமே வந்து சேரும். மூட்டை தூக்கும் பணி தினேஷ்க்கு! எழுது பொருட்கள் நிறைந்த முதல் மூட்டையை தினேஷ்  தூக்குவதைக் கண்டேன்  (தினமும் மூன்று வேளை உணவு என்று சிறு வயதில் சொல்லப்பட்டது, இவர் காதில் மூன்று வேளை உடற்பயிற்சி என்று விழுந்துவிட்டதாக ஒரு பேச்சு உண்டு! பாறை இவர் உடலுக்கு ஒரு முன்னுதாரணம்!). இதெல்லாம் தெரிந்திருந்தும், நான் அப்போதுதான் சாப்பிட்டிருந்த பொங்கல் சதி செய்துவிட்டது. கண்கள் விழித்திருந்தாலும், மூளை தூங்கிவிட்டது. அங்கேதான் பிரச்சினை ஆரம்பம். அவர்  இலகுவாகத் தூக்கியதைப்  பார்த்து கனம் தெரியாது அடுத்த மூட்டையை நான் தூக்க முயற்சிக்க, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக ஆகிப் போனது! இதுபோல் நான் அவதிப்படும் தருணங்களில் நிறைந்த வயிறு சிரிக்கப் பிறந்தவர் பாலா! 



எல்லாரும் வட்டமாக அமர பணி துவங்கியது. ஆரம்பத்தில் சிறிது குழப்பங்கள். கூட்டுப் பணிகளில் அது இயல்புதான்! கூட்டுப் பணிகளின் சிறப்பும் சுவாரஸ்யமும் கூட அதுவே. இயற்கையாக ஒரு தேர்வு அங்கே நடை பெறுகிறது. தன் திறமைக்கேற்ற பணிகள் அவரவர்க்கு வந்து சேர்ந்துவிடுகிறது. 

சதீஷ் புத்தகப் பைகளைத் திறக்க, சரண்யா, சுஜாதா மற்றும் குழந்தைகள் பென்சில், அளவுகோல் முதலிவற்றை பைகளுக்குள் வைக்க சரவணன் மற்றும் குழுவினர் நோட்டுகளை அடுக்க, பிரியா (தி. நகர்) புத்தகப் பைகளை மூடி வைக்க பிரியாவும் நானும் புத்தகப் பைகளை அடுக்க வட்டம் பூர்த்தியானது. 



வேலை மலைக்க வைக்கும் வேகத்தில் நடைபெற்றது. திட்டமிடுவதுதான் பெரிய வேலை. பாலாவும், ப்ரியாவும் அந்தப் பணியில். பாலா திட்டமிட்டு வேலை செய்வதை நீங்களெல்லாரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும். நன்றாகத் திட்டமிடுவார். ஆனால் திட்டம் அவர் மனதிலேயே இருக்கும். அவர் மனதிலிருக்கும் திட்டம் அறிந்து செயல்பட கூடவே மூன்று பேர் செல்வார்கள். ஆனால், திட்டம் மட்டும் வெளியே வராது. மூட்டை தூக்க வேண்டும் என்றால் அவரே தூக்க ஆரம்பித்துவிடுவார். கூடவே சென்ற மூவருக்கும் அப்போதுதான் தெரிய வரும் 'ஓ! மூட்டை அங்கே செல்ல வேண்டும்' என்று. 'பிறர்க்குச் சொல்வதற்கு முன் தானே முதலில் செய்து காட்ட வேண்டும் என்பதைச் 'சரியாகப்' புரிந்து கொண்டவர்! ஒவ்வொரு முறையும் பிரியா, பாலாவை முறைக்க வேண்டும். முறைப்பின் வீச்சு கொஞ்ச நேரம் தான்! மீண்டும் தானே செய்யத் தொடங்கிவிடுவார். 



ஒரு மணிக்கெல்லாம் புத்தகப் பைகள் அடுக்கும் பணி நிறைவுற்றிருந்தது. கிட்டத்தட்ட 75% பணி. கூட்டுப் பணியின் மலைக்க வைக்கும் வேகம். மதிய உணவு பாலிமர் விடுதியில். அங்கு எப்போதுமே கூட்டமிருப்பதில்லை. எங்களுக்காகவே முழு விடுதியும் முன்பதிவு செய்தது போலாயிற்று. அளவு சாப்பாடு மட்டுமே இருந்தது, தோசை தவிர்த்து. வட/தென் இந்திய சாப்பாடு இரண்டு வகைகளிலும் அவரவர் தேர்விற்கேற்ப உத்தரவு தந்திருந்தோம். (இரண்டிற்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை.) 

உணவிற்குப் பின், இப்போது நோட்டுப் புத்தகங்கள் மட்டும் பிரித்து வைக்க வேண்டிய பணி. அதுவும் விரைந்து நடைபெற்றது. சேர்க்கப்பட்ட பைகள், நோட்டுகள் சாக்குகளிலும், பெட்டிகளிலும் அடைக்கப்பட மாலை 5 மணி ஆகிவிட்டது. 



அனைத்தும் முடித்தபின், ஒரு சிறு கூட்டம். 



அதன்பின் கலைந்தோம். பிரதீப், டயானா,  பிரியா, அமித், பாலா, தாமு, தினேஷ், மற்றும் நான் எல்லோரும் ஸ்ரீ மிட்டாய் சென்றோம். பாவ் பாஜி, டோக்லா......பாதாம் பால். எல்லாம் ஆன பின், அவரவர் கூடுகளுக்குச் சிறகடித்தோம். உடல் மட்டுமே களைப்புற்றிருந்தது. மாறாக மனம் செயலூக்கம் பெற்றிருந்தது! சந்திப்போம் அடுத்தடுத்து வரும் 'வழங்கு விழாக்களில்'! 

No comments:

Post a Comment